Tuesday, December 04, 2007

Star9. நம்மாழ்வாரின் பாசுர முத்துக்கள்

திருவாய்மொழி

2793@
இலனது உடையனிது* என நினைவரியவன்*
நிலனிடை விசும்பிடை* உருவினன் அருவினன்*
புலனொடு புலனலன்,* ஒழிவிலன் பரந்த* அன்-
நலனுடை ஒருவனை* நணுகினம் நாமே.* 1.1.3


இப்பொருள் தனக்குடையவன் அல்லது தனக்கில்லாதவன் என்று நினைக்க இயலா தன்மை கொண்டவனும், உயிர்களிலும், உயிரில்லாதவற்றிலும் அந்தர்யாமியாக இருப்பவனும், (உரு: உடல், அரு: ஆன்மா) உணரப்படுகின்ற அனைத்திலும் நிறைந்திருந்தும் அப்பொருட்களின் குணங்களும் குற்றங்களும் தன்னைச் சாரா தன்மை கொண்டவனும், இவ்வகையில் எல்லாவற்றிலும் விரவி பரவியிருப்பவனும் (All Pervading) ஆன, நற்குணங்களுக்கு அதிபதியான ஒப்பற்ற பரமனை நாம் அடைந்தோம்!

2839@
மானேய் நோக்கி மடவாளை* மார்வில் கொண்டாய். மாதவா.*
கூனே சிதைய உண்டைவில்* நிறத்தில் தெறித்தாய். கோவிந்தா.*
வானார் சோதி மணிவண்ணா.* மதுசூதா. நீ அருளாய்* உன்-
தேனே மலரும் திருப்பாதம்* சேருமாறு வினையேனே. 1.5.5

மானின் கண்களை ஒத்த கண்களைக் கொண்ட திருமகளை உன் மார்பில் தரித்ததால், மாதவன் என்ற திருநாமம் கொண்டவனே!
மந்தரைக் கிழவியின் கூன் நீங்கும்படியாக அவள் மார்பில் உண்டை வில்லால் அடித்த கோவிந்தனே!
வானுலகமெல்லாம் நிறைந்த ஒளிமிக்க நீலமணி நிறத்தவனே!
அரக்கன் மதுவை மாய்த்த மதுசூதனனே!
தேன் நிறைந்த தாமரை மலர்களை ஒத்த உன் திருவடிகளை நான் அடைய அருள் புரிவாயாக!
பி.கு: மந்தரையை உண்டி வில்லால் அடித்த ராமர் மீது அச்செயலை ஏற்ற மனமின்றி, நம்மாழ்வார் அப்பழியை(!) குறும்புகளுக்கு பேர் போன கிருஷ்ணன் மீது சுமத்தி விடுகிறார் :)

2954@
ஆணல்லன் பெண்ணல்லன்* அல்லா அலியுமல்லன்,*
காணலுமாகான்* உளனல்லன் இல்லையல்லன்,*
பேணுங்கால்பேணும்* உருவாகும் அல்லனுமாம்,*
கோணை பெரிதுடைத்து* எம்பெம்மானைக்கூறுதலே. 2.5.10


எம்பெருமான் ஆனவன், ஆணும் பெண்ணும் அல்லன். இரண்டு பாலிலும் சேராத அலியும் அல்லன். நம் கண்களால் காண முடியாதவன். உண்டு/இல்லை என்று ஊர்ஜிதப்படுத்த இயலாதவன். ஆனால், அடியார்களுக்கு வேண்டுகின்ற காலத்திலே, வேண்டுகின்ற வடிவில், காட்சி தந்து ரட்சிப்பவன். ஆதலால், அப்பரந்தாமன் குறித்து எடுத்துரைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்!

2964@
எந்தாய். தண்திருவேங்கடத்துள் நின்றாய்* இலங்கை செற்றாய்,* மராமரம்
பைந்தாளேழுருவ * ஒரு வாளிகோத்த வில்லா,*
கொந்தார் தண்ணந்துழாயினாய் அமுதே* உன்னை என்னுள்ளே குழைத்த எம்
மைந்தா,* வானேறே* இனியெங்குப்போகின்றதே?. 2.6.9

இப்பாசுரத்தில் ஆழ்வாரின் பேரன்பும், பெரும்பக்தியும் எப்படிப் பிரவாகமாக வெளிவந்துள்ளது, பாருங்கள்! இதற்கு பொருள் விளக்கம் தேவையில்லை! திருமாலை பலவாறாகப் போற்றி, "என்னை விட்டு எங்கு போகின்றாய்?" என்று செல்லமாக ஆழ்வார் கோபிக்கிறார் :)

3002@
கிளரொளியிளமை* கெடுவதன் முன்னம்,*
வளரொளி மாயோன்* மருவிய கோயில்,*
வளரிளம் பொழில்சூழ்* மாலிருஞ்சோலை,*
தளர் விலராகிச்* சார்வதுசதிரே. 2.10.1


கிளர்ச்சியான இளமைப்பருவம் நம்மை விட்டு விலகுவதற்கு முன்பாகவே, ஒளிமிக்க மாயவன் எழுந்தருளியிருக்கும், இளம் சோலைகளால் சூழப்பட்ட திருமாலிருஞ்சோலை மலையை அடைந்து அவன் திருவடி பற்றுவதே நாம் தளர்வற்று உய்வதற்கு சாலச் சிறந்த வழியாகும்.

3050@
அச்சுதன் அமலன் என்கோ,* அடியவர் வினைகெடுக்கும்,*
நச்சுமா மருந்தம் என்கோ.* நலங்கடல் அமுதம் என்கோ,*
அச்சுவைக் கட்டி என்கோ.* அறுசுவை அடிசில் என்கோ,*
நெய்ச்சுவைத் தேறல் என்கோ.* கனியென்கோ. பாலெங்கேனோ. 3.4.5


ஆழ்வார் பெருமாளை 'எப்படி அழைபேன் உன்னை?" என்று பக்தியால் உருகுகிறார்! அற்புதமானதொரு பாசுரம்!

"பெருமானே! உன்னை அழிவில்லாதவன் (அச்சுதன்) என்பேனா? அமலன் (குற்றமற்றவன்) என்பேனா? அடியாரின் பாவங்களை போக்கும் உயர்ந்த மருந்து என்பேனா? அமுதம் என்பேனா? நற்சுவை உடைய கறுப்புக் கட்டி என்பேனா? அறுசுவை உணவு என்பேனா? மிக்க சுவையுடைய தேன் என்பேனா? கனி என்பேனா? பால் என்பேனா? உன்னை என்னவென்று அழைப்பேன் ?"


3856@..
திருமாலிருஞ்சோலை மலையே* திருப்பாற் கடலே என்தலையே*
திருமால்வைகுந்தமே* தண் திருவேங்கடமே எனதுடலே*
அருமாமாயத்து எனதுயிரே* மனமே வாக்கே கருமமே*
ஒருமா நொடியும் பிரியான்* என் ஊழி முதல்வன் ஒருவனே. (2) 10.7.8


இப்பாசுரத்தில் ஆழ்வார் தனது உடல், உயிர், சிந்தனை, வாக்கு, செயல் என்று அனைத்திலும் பரந்தாமனே நிறைந்திருப்பதால், தன்னை விட்டு ஒரு நொடியும் விலக முடியாத நிலைமையில் பரமன் உள்ளதை, அந்தப் பெருமாளுக்கே சுட்டிக் காட்டுகிறார் ! பரந்தாமனை எப்படி தன் பேரன்பாலும், பரிபூர்ண பக்தியாலும் நெகிழ வைத்து கட்டிப் போடுகிறார், பாருங்கள்!

3867@
கண்ணுள் நின்று அகலான்* கருத்தின்கண் பெரியன்*
எண்ணில்நுண் பொருள்* ஏழிசையின் சுவைதானே*
வண்ணநன் மணிமாடங்கள்சூழ்* திருப்பேரான்*
திண்ணம் என்மனத்துப்* புகுந்தான் செறிந்துஇன்றே. 10.8.8


எம்பெருமான், என் கண்ணை விட்டு அகலாமல் இருக்கிறான். என்னைத் தன் திருவடி சேர்த்துக் கொள்வதில் கருத்தாக இருக்கிறான்! அவன் எண்ணத்துள் அடங்கா நுட்பமான இயல்புடையவன். ஏழு இசைகளின் சுவையானவன். அழகிய மாணிக்க மாடங்கள் சூழ்ந்த திருப்பேர் நகரில் கோயில் கொண்டவன். அப்பேற்பட்டவன் என் நெஞ்சு நிறைய புகுந்திருப்பது முற்றிலும் உண்மையே!

3879@
வைகுந்தம் புகுதலும்* வாசலில் வானவர்*
வைகுந்தன் தமர்எமர்* எமதிடம் புகுதென்று*
வைகுந்தத்து அமரரும்* முனிவரும் வியந்தனர்*
வைகுந்தம் புகுவது* மண்ணவர் விதியே. 10.9.9


பரமபதத்தின் திருவாயிலை அடைந்தபோது, அங்கு நின்ற தேவர்களும் முனிவர்களும், "வைகுந்தனின் அடியார்கள் எங்கள் தலைவர்கள்! உங்களை வரவேற்பதில் எமக்கு பெருமகிழ்ச்சி!" என்று வியந்து போற்றி வரவேற்றார்கள். அத்துடன், "பூவுலக மாந்தர் பரமபதம் அடைவதும் விதிக்கப்பட்ட நற்செயலே!" என்றும் ஆனந்தப்பட்டனர்!

3882@..
முனியே.நான்முகனே.* முக்கண்ணப்பா* என்பொல்லாக்-
கனிவாய்த்* தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா.*
தனியேனாருயிரே.* எந்தலை மிசையாய் வந்திட்டு*
இனிநான் போகலொட்டேன்* ஒன்றும்மாயஞ் செய்யேல் என்னையே. (2)


இத்திருப்பாசுரத்தில், ஆழ்வார் பெருமானிடம், அவன் திருவடிகள் தன் தலை மீது பட்ட பிறகு, பரமன் தன்னை விட்டு பிரிந்து செல்ல உடன்பட மட்டேன் என்றும், பரமன் ஒன்றே கதி என்ற தன்னை வஞ்சிக்கலாகாது என்றும் உருகி கேட்டுக் கொள்கிறார்! பாசுரத்தின் வரிகளில் சரணாகதித்துவ பேரன்பு அற்புதமாக வெளிப்பட்டுள்ளது!!!

திருவிருத்தம்

2573@
வணங்கும் துறைகள்* பலபல ஆக்கி,* மதிவிகற்பால்-
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி,* அவையவைதோறு-
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்*
இணங்கு நின்னோரை இல்லாய்,* நின்கண் வேட்கை எழுவிப்பனே. 96


உன்னை வணங்கி வழிபடுவதற்கான, கர்மம், ஞானம், பக்தி என்ற மூவகைப்பட்ட யோகங்களை உருவாக்கியவன் நீயே! எண்ணங்களின் வேறுபாட்டால் ஒன்றோடொன்று முரண்படுவது போலத் தோன்றும் பல (வைணவ, சைவ, சமண .. ) மதங்களையும் உருவாக்கி, மாந்தர் (உன்னை அந்தராத்மாவாகக் கொண்ட) பலவகைப்பட்ட தெய்வங்களையும் வழிபடுமாறு செய்வித்தாய்! இப்படியாக உன் கீர்த்தியானது வியாபித்திருக்கும்படி செய்தாய்!

முழுமுதற்கடவுளான உன்னை தலைவனாகக் கொண்ட நான், பிற சமயத்தவர் மீது பிணக்கின்றி, உன் மேல் எனக்குள்ள பக்தியை பெருக்கிய வண்ணம் இருப்பேன்!

2516@
நீலத் தடவரை மேல்* புண்டரீக நெடுந்தடங்கள்-
போல,* பொலிந்து எமக்கு எல்லாவிடத்தவும்,* பொங்குமுந்நீர்-
ஞாலப் பிரான் விசும்புக்கும் பிரான் மற்றும் நல்லோர்பிரான்*
கோலம் கரிய பிரான்,* எம்பிரான் கண்ணின் கோலங்களே. 39


இப்பாசுரம் தலைவனது வடிவைக் கண்ட தலைவி, தன் தோழியிடம் கூறுவது போல அமைந்தது. விஸ்வரூபப் பெருமானின் கண்ணழகுக்கு ஆழ்வாரின் உவமானத்தைப் பாருங்கள்!

"நீலரத்ன மயமான ஒரு பெரிய மலையின் செந்தாமரை மலர் பூத்த தடாகங்களை ஒத்த கண்களை உடையவனும், கடல் சூழ்ந்த மண்ணுலகுக்கும், விண்ணுலகுக்கும், மற்றும் நல்லவர் யாவர்க்கும் தலைவனும், அழகிய கரிய திருமேனியனும் ஆனவன் எம்பெருமான்!"

என்றென்றும் அன்புடன்
பாலா

16 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாலா....
ரெண்டு நாளா தமிழ்மணம் பக்கமே வரமுடியலை!
அதனால, லேட்டாச் சொன்னாலும் லேட்டஸ்டா சொல்லிக்கிறேன்!

நட்சத்திர வாழ்த்துக்கள்!

பதிவு மழை பொழிகிறது! ஒவ்வொரு துளியிலும்
உன் திறம் தெரிகிறது! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மந்தரையை உண்டி வில்லால் அடித்த ராமர் மீது அச்செயலை ஏற்ற மனமின்றி, நம்மாழ்வார் அப்பழியை(!) குறும்புகளுக்கு பேர் போன கிருஷ்ணன் மீது சுமத்தி விடுகிறார் :)//

கண்ணன் குறும்பன் தான்! ஆனால் ஆழ்வார் குறும்பர் அல்லர்! :-)
நைசா பழி ஓரிடம்! பாவம் ஓரிடம் செய்ய! :-))

இங்கு கோவிந்தா ன்னு சொல்லுவதால் அது கண்ணன் என்று மட்டும் பொருள் அல்ல! ராமனுக்கும் கோவிந்தன் என்ற பெயர் உண்டு!
கோ=வேள்வி! வேள்வி காத்த இராமனும் கோவிந்தன் தான்!
கோ=பசு! பசுக்களைக் காத்த கண்ணனும் கோவிந்தன் தான்!

ஆழ்வாருடைய அடுத்த பாடலைப் பாருங்கள். விளங்கி விடும்!
மனை சேர் ஆயர் குலமுதலே.
மா மாயனே மாதவா.
சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா

ஆயர் குல முதல்-ன்னு சொல்லிட்டு, ஏழு மராமரங்களை எறிந்தாய்-ன்னும் சொல்லுவாரு!
இது போல இராமனையும், கண்ணனையும் அவ்வப்போது இடம் மாற்றிப் பாடும் பாசுரங்கள் வரும்!

வீட்டில் சில சமயம் அம்மா தம்பி பேரை அண்ணனுக்கும், அண்ணன் பேரைத் தம்பிக்கும் மாத்திக் கூப்புடுவாங்க, ஏதோ ஒரு யோசனையில்! அது போலத் தான் நம்மாழ்வார் திருவாய்மொழியில் பண்ணுவாரு! இராமனில் கண்ணனையும், கண்ணனில் இராமனையும் காட்டுவதும் ஒரு இயல்பு!

அரச குடியில் பிறந்தும், இராமனுக்குப் போர்த் தந்திரங்கள் போதவில்லை; அதை இடையர் குலத்தில் வளர்ந்த கண்ணனை இட்டு நிரப்புதல் ஒரு வகை!

கண்ணனின் கோபியர் லீலைகளைச் சமன்படுத்த, ஒரு மண நோன்புடையான் இராமனை இட்டு நிரப்புதல் இன்னொரு வகை!

இப்படி ஒரு அவதாரத்துக்கு, இன்னொரு அவதாரத்தின் பெருமையைக் காட்டித் திருந்த நம்மாழ்வாரால் மட்டுமே முடியும்!

பாசுர முத்துக்கள் அருமை, பாலா!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அச்சுதன் அமலன் என்கோ,* நலங்கடல் அமுதம் என்கோ,*
அச்சுவைக் கட்டி என்கோ.* அறுசுவை அடிசில் என்கோ,*
//

சிலப்பதிகாரத்தில் இந்த என்கோ வரிகள் எப்படி வருமோ, அதே மெட்டில் ஆழ்வார் பாடலும் இருப்பதைப் பாருங்க!

மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ!
என்று ஆழ்வார் பாசுரத்திலும் சிலம்பு சிலம்புகிறது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆணல்லன் பெண்ணல்லன்* அல்லா அலியுமல்லன்//

ஆணல்லன், பெண்ணல்லள்
அல்லால் அலியும் அல்ல-ன்னு தானே சொல்லணும்!
ஆணுக்கும் அல்லன்
பெண்ணுக்கும் அல்லன்-னு சொன்னா எப்பிடி? :-)

enRenRum-anbudan.BALA said...

கண்ணபிரான்,
நம்மாழ்வார் பதிவு இட்டவுடன் தாங்கள் எங்கிருந்தாலும் ஓடி வந்து விடுவீர்கள் என்று
எனக்குத் தெரியாதா :)

தங்களின் "கோவிந்தன்" பற்றிய அருமையான விளக்கம் தங்களின் நிறைந்த "பிரபந்த"
வாசிப்பனுபவத்தை பறைசாற்றுகிறது !

சிலப்பதிகார "என்கோ"வும் நன்றாகவே உள்ளது :)

//ஆணல்லன், பெண்ணல்லள்
அல்லால் அலியும் அல்ல-ன்னு தானே சொல்லணும்!
ஆணுக்கும் அல்லன்
பெண்ணுக்கும் அல்லன்-னு சொன்னா எப்பிடி? :-)
//
குருகூர் பிரானையே கிண்டல் செய்வது தகுமா ;-)

எ.அ.பாலா

said...

nalla pathivu ... vAzka :)

முகவை மைந்தன் said...

//ஆணல்லன், பெண்ணல்லள்
அல்லால் அலியும் அல்ல-ன்னு தானே சொல்லணும்!
ஆணுக்கும் அல்லன்
பெண்ணுக்கும் அல்லன்-னு சொன்னா எப்பிடி? :-)
//

இது மொழியின் குறை. ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. உயர்திணையா? அஃறினையா? எதுவும் இல்லை. இல்லை என்றும் சொல்வதற்கில்லை. பின் எப்படித் தான் குறிப்பிடுவது?

இங்கு இஸ்லாமியர்கள் உருவம் இல்லாத இறையை ஆண்பால் விகுதியில் விளிப்பதை ஒப்பு நோக்கலாம். எனவே நம் ஆழ்வார் பெண்ணல்லன் எனக் குறிப்பிட்டதில் தவறு எதுவும் இல்லை.

குறிப்பு:உங்க விளையாட்டுல நான் மாட்டலையே;-)

குமரன் (Kumaran) said...

எனக்குப் பிடித்த பாசுரங்களாகவே இட்டிருக்கிறீர்கள் சீனியர்.

முதல் பத்தினை அடிக்கடி அனுசந்தானம் (மனத்தில் பொருளுடன் நினைத்துக் கொள்வது - அடைப்புக் குறிக்குள் போடும் இது உங்களுக்காக இல்லை) செய்வது என் வழக்கம். நீங்கள் தந்திருக்கும் 'இலனது உடையனிது' பாசுரம் மனத்தில் ஓடும் போது பொருள் ஆழத்தில் மனம் மூழ்கிவிடும்.

பல முறை 'கூனே சிதைய உண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா' என்று பாடியிருக்கிறேன். மாதவா என்றதில் ஆழ்ந்து போவதால் ஒரு முறை கூட நீங்கள் சொன்ன 'நல்ல பிள்ளை' இராமன் செய்ததை 'பொல்லாதவன்' கண்ணன் மேல் ஆழ்வார் ஏற்றிச் சொல்வதைக் கவனிக்கவில்லை. :-)

இந்த 'ஆணல்லன் பெண்ணல்லன்' பாசுரம் மேலோட்டமாகப் பார்க்கும் போது 'கோணை பெரிதுடைத்து எம்பெம்மானைக் கூறுதற்கே' என்று ஆழ்வாரும் வேதம் 'வாக்காலும் மனத்தாலும் எட்டாதவன்' என்று பரமனைப் பற்றிச் சொல்லத் தொடங்கி சொல்லி முடியாது என்று பின் வாங்குவதைப் போல் பின்வாங்குகிறார் என்று தோன்றும். ஆனால் 'உயர்வற உயர்நலம் உடையவனால் மயர்வறும் மதிநலம் அருளப்பெற்றவர்' என்பதால் ஆழ்வார் தெளிவாகத் தான் சொல்லியிருக்கிறார் என்று பூர்வாசாரியர்கள் பொருளுரை தந்திருக்கிறார்கள். அதனைத் தான் இரவிசங்கரும் தொட்டுச் சென்றிருக்கிறார். அவர் முதலில் கேட்டுவிட்டதால் அவரே வந்து ஆசாரியர்கள் சொன்ன விளக்கத்தைச் சொல்லட்டும். :-)

'அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்' என்று பெரியாழ்வார் சொல்வதைப் போல் இங்கே நம்மாழ்வார் 'கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்' என்று சொல்கிறார் பாருங்கள். தனியாக திருமாலிருஞ்சோலை போகும் வாய்ப்பு கிடைக்கும் போதேல்லாம் பிரகாரத்தில் இந்தத் திருமாலிருஞ்சோலைப் பாசுரங்களைப் பாடுவது வழக்கம்.

திருமேனி அழகில் ஆழ்பவர்களுக்கு 'அச்சுதன் அமலன் என்கோ' பாசுரங்கள் மிகவும் தித்திக்கும். அதுவும் அர்ச்சாவதாரத்தில் ஆழங்கால் பட்டால் சொல்லவே தேவையில்லை.

திருமாலிருஞ்சோலை மலையே பாசுரமும் கண்ணுள் நின்று அகலான் பாசுரமும் பாடிப் பரவினால் எல்லா திசைகளிலும் உள்ளும் புறமும் எல்லா இடங்களிலும் அவன் நிறைந்திருப்பதை உணர்தல் எளிதாகப் போகுமே.

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே - எவ்வளவு தெளிவான அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறார். சாதி மத பேதமில்லாமல், நம்புவோர் நம்பாதவர் வேறுபாடில்லாமல், உயர்திணை அஃறிணை வேறுபாடில்லாமல் மண்ணில் இருப்பவர் எல்லோருமே வைகுந்தம் புகுவர் - அந்தப் பயணத்தில் தான் எல்லோரும் எல்லாமும் இருக்கிறது என்ற தெளிவு.


முனியே நான்முகனே முக்கண்ணப்பா என்று எல்லா தேவர்களுக்கும் அந்தர்யாமியாக இருக்கும் பரமனைப் போற்றி சரணாகதி செய்யும் பாசுரம் தான் எவ்வளவு அழகு.

கீதாசார்யன் சொல்வது அப்படியே 'வணங்கும் துறைகள் பல பல ஆக்கி' பாசுரத்தில் வருகிறது. அங்கே அவனே சொன்னான். கேட்பாரில்லை. இங்கே ஆழ்வார் சொல்கிறார். இவர் சொல்வதையாவது கேட்போம்.

நீலத் தடவரை மேல் புண்டரீக நெடுந்தடங்கண் - ஆகா என்ன ஒரு அழகான உவமை.

enRenRum-anbudan.BALA said...

குமரன்,
பாசுரங்களை ஆழ்ந்து அனுபவித்து நீங்கள் இட்ட பின்னூட்டம், மனதுக்கு நிறைவைத் தருவதாக உள்ளது. கண்ணபிரான், தேசிகன் மற்றும் தங்களின் ஊக்கமே, தான் ஆழ்வார்கள் குறித்தும், திருப்பாசுரங்கள் குறித்தும் நான் தொடர்ந்து பதிவதற்கு காரணம் என்றால் அது மிகையில்லை. வருகைக்கும், அருமையான கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

சீனியர் பாலா

முகவை மைந்தன்,
வாங்க, நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆணல்லன், பெண்ணல்லள்
அல்லால் அலியும் அல்ல-ன்னு தானே சொல்லணும்!
ஆணுக்கும் அல்லன்
பெண்ணுக்கும் அல்லன்-னு சொன்னா எப்பிடி? :-)
//
குருகூர் பிரானையே கிண்டல் செய்வது தகுமா ;-)//

@பாலா
குருகூர் பிரானை அடியேன் கிண்டல் செய்வேனா?
அப்படியே பாசுரங்களைச் சுண்டல் செய்து சாப்டுருவேனே தவிர கிண்டல் செய்வேனோ! :-)

@முகவை மைந்தன்
//குறிப்பு:உங்க விளையாட்டுல நான் மாட்டலையே;-)//

ஹிஹி
நான் சும்மானா, பாலா என்ன பதில் சொல்றாரு-ன்னு பாக்கலாம்-னு தான் தொட்டும் தொடாமலும் சென்றேன்!
:-)

உண்மையில் அந்தப் பாசுரத்தில் ஆழ்ந்த கருத்து இருக்கு!
இதே கேள்வியை இராமானுசரிடம், சில சீடர்கள் கேட்டார்களாம்! புருஷோத்தமன், புருஷர்களில் உத்தமன்-னு இறைவனைச் சொல்லிட்டு...ஆணும் அல்லன், பெண்ணும் அல்லன்-னு மாத்தி சொல்றீங்களே-ன்னு கிட்டத்தட்ட சண்டைக்கு வந்தார்களாம்! :-)
அப்போது இராமானுசர் விளக்கிய கருத்து இறைத் தத்துவத்துக்கு தேடல் விளக்கு போன்றது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பல சமயங்களும் இறைவனைப் பிதா, குரு, பகவன் என்று ஆண் உருவமாகவே சித்தரித்து இருக்கு-ன்னு நாம நினைச்சிக்கிறோம்! ஆனா ஆழமாகப் பார்த்தால் அப்படி இல்லை!

இறைவன் என்ற சொல்லில் இருக்கும் ’அன்’ விகுதி ஆண்பால் விகுதி. அதனால் இறைவன் "ஆண்" என்று தோற்றம் தன்னை அறியாமல் வந்து விடுகிறது!

ஆனால் இறை என்றால் தலை, தலையாயது என்று தான் பொருள்!
ஆழ்வாரின் அடுத்த வரியைப் பாருங்க!
//பேணுங்கால் பேணும்* உருவாகும் அல்லனுமாம்//

அந்தத் தலையாயது ஆணாகவும் இருக்கு, பெண்ணாகவும் இருக்கு, அலியாகவும் இருக்கு, பேணுங்கால் பேணுவது போலவே!

ஆணின் தன்மையான தலைமைப் பொறுப்பும் தந்தைப் பண்பும் இருக்கு! ஆனால் ஆண் என்று சொல்ல முடியுமா?
பெண்ணைப் போல தாய்க்குணமும் இருக்கு!... ஆனால் பெண் என்று சொல்ல முடியுமா?

"தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு"... என்றும் இன்னொரு பாட்டில் கூறுகிறார்!
எப்படி நாம் ஒருவரே அப்பாவாகவும், மகனாகவும், மாமனாகவும், மச்சானாகவும் இருக்க முடிகிறது?
அதே போல் இறைவன் அனைத்துமாய் இருக்கிறான்!
அப்படி இருப்பதாலேயே, அதுவே அவன் என்று ஆகி விடாது!

அவன் ஆண் அல்லன் ன்னு சொன்னாக் குறை உடைய ஆண் என்று ஆகி விடும்.
அவள் பெண் அல்லள் ன்னு சொன்னா குறை உடைய பெண் என்று ஆகி விடும்.
அதனால் தான் தனித் தனியாக ஆழ்வார் சொல்லவில்லை!

தலையாய, அடையப்பட வேண்டிய என்ற பொருளில் வருவதே ’அன்’!
பரம புருஷன் அவன் ஒருவனே! மற்றவை எல்லாம் அவனை அடைபவையே! - அந்த ஒருவனே ’அன்’!
அதனால் தான் ஆணல்லன், பெண்ணல்லன்-ன்னு ’அன்’ போட்டுச் சொல்லறாரு!

அடியேன் என்று....
ஆணும் சொல்லிக் கொள்ளளாம்,
பெண்ணும் சொல்லிக் கொள்ளளாம்,
அலியும் சொல்லிக் கொள்ளளாம்!

அது போல் தான் இறைவன்!
ஆணும் அடைந்து கொள்ளலாம்,
பெண்ணும் அடைந்து கொள்ளலாம்,
அலியும் அடைந்து கொள்ளலாம்!
பேணுங்கால் பேணும் உருவாகும்!!!

முகவை மைந்தன் said...

அட்டகாசமா விளக்குறீங்க, பாடலையும் அதன் 'மறை'பொருளையும்!

எல்லோரும் கொஞ்சம் பெரியவங்களாத் தெரியிரீங்க! நான் ஓரமா உக்காந்து கேட்டுக்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//முகவை மைந்தன் said...
எல்லோரும் கொஞ்சம் பெரியவங்களாத் தெரியிரீங்க! நான் ஓரமா உக்காந்து கேட்டுக்கிறேன்.//

அலோ, தலைவா!
நான் ரொம்ப சின்னப்பையன்!
வேணும்னா பாலாவையும், குமரனையும் கேட்டுப் பாருங்க!
அடியேன் பொடியேன்! :-)

R.DEVARAJAN said...

அன்பர்களே,
'ஆண் அல்லன் ' , 'பெண் அல்லன்'.. 'அன்' விகுதி மொழியின் குறைபாடு .'புருஷோத்தமன்' எனும் வட சொல்லின் 'புருஷ' சப்தமும் ஆண் பால் தான்.எம்பெருமானின் இறைத்தன்மையில் எள்ளளவும் குறை இல்லை.
'மிக்க இறை நிலையிலோ', 'மேலாம் உயிர் நிலையிலோ' எக்காலத்திலும் எதனாலும் மாற்றங்களை ஏற்படுத்த இயலாது.

Unknown said...

mikka nantri

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails